மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் நிராகரிப்பு; எதிர்க்கட்சிகள் அதிருப்தி!
நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய (திங்கட்கிழமை, ஜூலை 21, 2025) அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழங்கியிருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இத்தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, பாதுகாப்பு நிலைமை குறித்தும் பெரும் கவலைகள் எழுப்பப்பட்டன. இது தவிர, மேலும் சில அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை வழங்கியிருந்தனர்.
ஆனால், துணை சபாநாயகர் ஜெகதாம்பிகா பால், சபாநாயகரின் உத்தரவின்படி, இந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் ஏற்கப்படவில்லை என்று அவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினர். முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு மறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், ஆளும் தரப்பு, அலுவல்களைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் மக்களவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.