மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் தொடர்புடையதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ந்தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார். இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே கவிதா தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 23 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.