#LebanonExplosion | வெடித்து சிதறும் தொலைத்தொடர்பு சாதனங்கள்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.
லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பேஜர்கள் வெடிப்புகள் நிகழ்ந்த ஒருநாள் கழித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பல வாக்கி டாக்கி சாதனங்களும் வெடித்துள்ளன.
இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹிஸ்புல்லா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று ஹிஸ்புல்லா ஆயுதக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதுபற்றி இஸ்ரேல் இதுவரை எதையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.