இல.கணேசன் மறைவு - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல. கணேசன், தனது இல்லத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகக் கடந்த 10 நாட்களாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் அவர்க்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் , ”தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். தமிழ்நாடு முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் இரங்கல் பதிவில், இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், நாட்டின் தன்னலமற்ற சேவைகளுக்கும், மக்களின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது மறைவு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்” என்று தெரிவித்துள்ளர்.
அதிமுக பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய திருமிகு இல. கணேசன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; மணிப்பூர் மாநில ஆளுநர், மேற்கு வங்காள ஆளுநர் (கூடுதல்), மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர். ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், துணை முதல்வர் உதயநிதி,விசிக தலைவர் திருமாவளவன்,தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.