கிட்னி திருட்டு விவகாரம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், கிட்னி திருட்டு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து, ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அப்போது பேசியவர், "கிட்னி விற்பனை சம்பவம் இப்போது மட்டும் இல்லாமல் முந்தைய காலங்களிலும் நடந்துள்ளது. நாமக்கல்லில் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் பேரில் இடைத்தரகர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், புகாருக்குள்ளான இரண்டு மருத்துவமனைகளிலும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தவறான சான்றிதழ்களை வழங்கியதும், சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் புகாருக்குள்ளான மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கிய சான்றிதழும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்க படவேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை உட்பட 4 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுகிறது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அத்துடன், உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தவறானது என மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.