குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற ஹரியானாவை சேர்ந்த மனுபாகர் மற்றும் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றஇந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (பஞ்சாப்), கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார் (உத்தர பிரதேசம்) ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதாகும் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்திசாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
கேல் ரத்னா விருது பெறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் ரொக்க தொகை, பாராட்டு பத்திரம், பதக்கம் வழங்கப்படும். அர்ஜுனா விருது பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்க தொகை, அர்ஜுனன் சிலையுடன் பாராட்டு பத்திரம் வழங்கப்படும். இந்த விருதுகளை வரும் 17-ம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.
வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து: தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்), நித்யா சுமதி சிவன் (பாராபாட்மின்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா-பாட்மின்டன்), அபய் சிங் (ஸ்குவாஷ்) ஆகியோரும் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி, பாரிஸ் பாராலிம்பிக்ஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதேவேளையில் நித்யா சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.
விருது வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வெற்றிகள் தொடரட்டும். தமிழகத்தில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்கட்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்