தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரள போக்குவரத்து துறை - நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கேரள மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள், திடீரென மறித்து, பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரள போக்குவரத்து துறை ரூ. 70 லட்சத்திற்கும் வரை அபராதம் விதித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், பேருந்து செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாறாக, பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு பேருந்துகளை சிறைபிடிப்பது ஜனநாயக அரசாங்கம் செய்யும் வேலை அல்ல.
தமிழ்நாடும், கேரளமும் இயற்கையாகவே பிணைப்பு கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டு மக்கள் கேரளத்திற்கும், கேரள மக்கள் தமிழ்நாட்டிற்கும் அதிக அளவில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனர். கேரள அரசின் இத்தகைய நடவடிக்கைகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்டகால நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் கடுமையாகப் பாதிக்கும்.
கேரளா அரசு ரூபாய் 70 லட்சம் வரை அபராதம் விதித்ததால் இன்று (7.11.2025) முதல் கேரள மாநிலத்திற்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு குறிப்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தலையிட்டு, கேரள போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பயணிகளை நடுவழியில் இறக்கி விடுவது, மிக அதிக அளவில் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.