கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் - 44 பேர் கைது!
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 18 வயது தலித் தடகள விளையாட்டு வீராங்கனையை, 5 ஆண்டுகளாக 62 பேர் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் இந்தாண்டு வரை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் விவரங்களை மாணவி தெரிவித்ததை தொடர்ந்து ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவியின் காதலன் அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் அடங்குவர்.
இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு விசாரணை டிஐஜி அஜிதா பேகம்,
“இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெளிநாடு சென்று விட்டதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட 62 பேரில் 4 பேர் குறித்த குறிப்பிட்ட தகவல் கிடைக்கவில்லை. ஆனால் 58 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.