"அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முக்கிய உத்தரவுகளை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார் " - காணொலி வெளியிட்டு சுனிதா கெஜ்ரிவால் பேட்டி
அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முக்கிய உத்தரவுகளை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளதாக காணொலி வெளியிட்டு சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21.03.2024 அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை கைது செய்தனர். இதனை அடுத்து டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ஏழு நாள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 28 அம் தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி நிலையில் மேலும் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும், சிறையில் இருந்த படியே பணிகளை செய்வேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் சிறையில் இருந்து விடுதலையாகி டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமலாக்கத்துறையில் காவலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பின்னர் அவரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு டெல்லி மக்களிடையே உரையாற்றினார். அதில் ”அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பிரார்த்தியுங்கள்” என்கிற பிரச்சாரத்தை கட்சித் தொண்டர்கள் முன்னெடுக்க வேண்டும் என பேசினார். மேலும் ஊழல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் தங்களது பிரார்த்தனைகள் மூலம் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று முற்பகல் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களிடம் பேசிய சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்ததாவது..
“ டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் தான் சிறையில் இருப்பதால், டெல்லி மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தினந்தோறும் தங்கள் பகுதிக்கு சென்று மக்கள் பிரச்னைகளை கேட்டு அவற்றை தீர்க்க வேண்டும்" இவ்வாறு அந்த வீடியோவில் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.