பாஜகவில் இணைந்த கேதர் ஜாதவ் - அரசியல் களத்தில் புதிய இன்னிங்ஸ்!
மாகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் (வயது. 40) இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் மும்பை அணி உட்பட 6 அணிகளில் விளையாடி உள்ளார். 2014ல் அறிமுகமான இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் கேதர் ஜாதவ் அரசியலில் புதிய இன்னிங்ஸை தொடங்க உள்ளார். மாகாராஷ்டிராவில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில், அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, அசோக் சவான் மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “சத்ரபதி சிவாஜிக்கு நான் தலைவணங்குகிறேன். பிரதமர் மோடி, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரால் பாஜக வளர்ச்சி அரசியலைச் செய்கிறது. பவன்குலேவின் கீழ் நான் பாஜகவில் இணைகிறேன்” என்று கூறினார். அதற்கு பவான்குலே, “இது எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான் அவரை வீட்டிற்கு வரவேற்கிறேன். அவரைத் தவிர, ஹிங்கோலி மற்றும் நான்டெட்டில் இருந்து பலர் எங்களுடன் இணைந்துள்ளனர்," என்று கூறினார்.
இதற்கு முன்னதாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் பட்டியலில் நவ்ஜோத் சிங், யூசுப் பதான், மனோஜ் திவாரி, கவுதம் கம்பீர் ஆகியோர் அரசியலில் வெற்றி கண்டனர். இதில் கவுதம் கம்பீர் தற்போது அரசியலில் இருந்து விலகி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார்.