காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!
ஜம்மு-காஷ்மீரில், பக்தர்கள் வந்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை தீட்டினர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 9ம் தேதி இரவு, ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலினால் பேருந்து பள்ளத்தில் விழுந்து 9 பேர் பலியாகினர். மேலும் 41 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய, மாநில புலனாய்வு முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் உதவியாளராக இருந்த ஹக்கம் கான் கடந்த ஜுன் 15ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். இவரிடம் மூன்று முறை விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை தீட்டினர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படி, ஹக்கம் கான் பயங்கரவாதிகளுக்கு 8 நாட்கள் இருப்பிடம் மற்றும் உணவு கொடுத்ததுடன், தாக்குதல் நடத்துவதற்கான இடத்திற்கும் கூட்டிச்சென்றது தெரியவந்தது.
ஹக்கம் கான் கடந்த ஜுன் 7ம் தேதி, மூன்று பயங்கரவாதிகளை அழைத்துச் சென்று சம்பவம் நடத்துவதற்கான இடத்தை காட்டியிருக்கிறார். தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது வளைவுப் பகுதி என்பதால் வாகனங்கள் மெதுவாக வரும். மேலும் அது தாழ்வான சாலை அமையும் பகுதி என்பதால் தொலைவில் இருந்து பார்த்தால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது.
இந்த காரணங்களால் தாக்குதல் நடத்துவதற்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதை ஸ்லீப்பர் செல் போன்ற பயங்கரவாதிகளுக்கு உதவும் உள்ளூர் நபர்கள் மூலம் தெரிந்துகொண்டுள்ளனர்.
பின்னர் ஜுன் 9ம் தேதி பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பயங்கரவாதிகள் ரஜௌரியில் உள்ள வனப்பகுதி வழியாக தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆல்பைன் வெஸ்ட் என்று கூறப்படும் மொபைல் செயலி மூலமாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ரஜௌரி, பூஞ்ச், கதுவாவில் வனப்பகுதி வழியாக ஊடுருவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.