“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது நமது கடமை“ - திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேச்சு!
திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி, துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது, “யுஜிசி அண்மையில் வெளியிட்டுள்ள புதிய வரைவு நெறிமுறைகளை தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் முன் வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் தேசிய கல்வி கொள்கை ஆபத்தானது என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். தேசிய கல்விக்கொள்கை ஆர்எஸ்எஸ் அஜண்டாபடி வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஆர்எஸ்எஸ்-ன் செயல் திட்டங்களை பாஜக நடைமுறைபடுத்தி வருகிறது. இதுதான் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு அடிப்படை காரணம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆய்வதற்கு ராஜமன்னார் குழுவை நியமித்தார். அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. இன்றைக்கு அந்த பரிந்துரைகளை நடைமுறைபடுத்த சொல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்படி ஒரு ஆட்சி வரும் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற முழக்கத்தை முன்வைக்கும் ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை முன்நிறுத்தி, தேசிய கல்வி கொள்கைகளை முன்வைக்கும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் என்பதை தொகைநோக்கு சிந்தனையுடன் கருணாநிதியால் பார்க்க முடிந்தது.
இந்தியாவில் எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்தாலும் வேறு எவருக்கும் தோன்றாதது அவருக்கு தோன்றியது. அவர் அமைத்த குழு என்பது மிக முக்கியமான வரலாறு. அந்த குழு, அரசிலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமானால், 3ல் 2 பங்கு மாநில அரசுகள் ஒப்புதல் தந்தால்தான் முடியும் என்ற பரிந்துரையை கொண்டு வந்தது. அந்த பரிந்துரை தேசிய அளவில் கொண்டு சென்று நாம் போராட வேண்டும். தமிழ்நாடு மட்டும் போராடினால் போதாது. நீட் தேர்வு வேண்டாம் என்றும் தேசிய கல்வி கொள்கையில் ஆபத்து இருக்கிறது என்று தமிழ்நாடு மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திற்கும் விழிப்புணர்வு இல்லை.
அதனால் இந்தியா கூட்டணியை பயன்படுத்தி ராகுல் காந்தி போன்ற தலைவர்களை முன் நிறுத்தி ராஜமன்னார் பரிந்துரையை நடைமுறைபடுத்த தேசிய அளவில் ஆதரவை திரட்ட வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் அதிகார பட்டியல்களுக்கு பொதுவான ஒத்திசைவு பட்டியலில்தான் கல்வி இடம்பெற்றுள்ளது. மிசா நடைமுறைக்கு வந்தபோது இந்திரா காந்தி, சில மாநில அரசுகளின் அதிகார பட்டியலை மத்திய அரசுக்கு மாற்றினார். அதன்பின்பு வந்த ஆட்சியாளர்கள் சிலவற்றை மாநில அதிகார பட்டியலுக்கு மாற்றினார்கள். அதில் கல்வி மட்டும் விடுபட்டுவிட்டது. எனவே அதை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்துவது நமது கடமை”