#Karnataka | “ஆளுநர் மாளிகை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!
தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த ஆளுநரின் செயல் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், ஆளுநர் மாளிகை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தி அதற்கு பதிலாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநரின் இந்த ஒப்புதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. இது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் வருகிற ஆக. 29-ம் தேதி வரை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “அமைச்சரவையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளோம். என் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆளுநர் மாளிகை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.