"Caste Census தொடர்பான கங்கனாவின் கருத்து பாஜகவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது" - காங்கிரஸ் கட்சியின் #SupriyaShrinate கருத்து!
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கங்கனாவின் கருத்துக்கள் பாஜகவின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டியில், "மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும்" என்று தெரிவித்திருந்தார். கங்கனாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், "கங்கனாவின் கருத்தில் உடன்பாடு இல்லை. எதிர் காலத்தில் கட்சியின் கொள்கை விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு அதிகாரம் இல்லை" என, பாஜக விளக்கம் கொடுத்தது.
இந்த சூழலில், இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ``சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கக்கூடாது என்று பாஜக எம்.பி. கங்கனா மீண்டும் கூறியுள்ளார். நீங்கள் ஒரு உயர் சாதியைச் சேர்ந்த பணக்காரர், நடிகை மற்றும் ஒரு எம்.பி.யாக உள்ளீர்கள். அப்படி இருக்கையில் ஒரு தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியைச் சேர்ந்த ஒரு தனிநபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? பிரதமர் மோடி அவர்களே, உங்கள் அமைதியை இப்போதாவது முறித்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டை, உங்கள் கூட்டணிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகளிடம் சொல்லுங்கள்.கங்கனாவின் கருத்துக்கள் பாஜகவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது’’
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீநாத் பதிவிட்டுள்ளார்.