கனகசபை தரிசன போராட்டம்... "நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி !
சென்னை மயிலாப்பூர் பி.என்.கே. கார்டனில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
"சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது என்பது காலம் காலமாக உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது.
இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் அரசை முதலமைச்சர் முன் நிறுத்துவார். திமுக ஆட்சிக்கு வந்த பின் 18 பெண் ஓதுவார்கள் இதுவரை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓதுவார் பயிற்சி பள்ளிகளை மேம்படுத்தி ஆண்டு ஒன்றுக்கு 80 முதல் 100 ஓதுவார்கள் பயிற்சி முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கெல்லாம் திருக்கோயிலில் ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறதோ அங்கு இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 100 நபர்களுக்கு குறையாமல் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான முயற்சிகளை அறநிலையத்துறை விரைவுப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.