பாஜகவில் இணைகின்றனரா கமல்நாத், நகுல்நாத்?
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் அவரது மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என்ற முழக்கத்துடன் பாஜக பணியாற்றி வருகிறது. பாஜகவிற்கு எதிராக இந்திய அளவில் ராகுல் காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பலர் விலகி வருகின்றனர். கடந்த பிப்.12-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தனது மகன் நகுல்நாத் எம்.பி.யுடன் பாஜகவில் இணையவுள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி.யான நகுல் நாத், தனது அதிகாரப்பூர்வ, எக்ஸ் பக்கத்தில் தனது சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.