கண்டாங்கி பட்டுடுத்தி கையில் தடியுடன் மதுரையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..!
காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்புசாமி சன்னதியின் உத்தரவு பெற்று மதுரை நோக்கி கள்ளழகர் தங்க பல்லக்கில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர் கம்பி ஏந்தி புறப்பட்டார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல் நாள் சித்திரை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார்.
வழி நெடுகிலும் உள்ள சுமார் 485 மண்டகப் படிகளில் பெருமாள் எழுந்தருளியவாறு மதுரை சென்று திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து நாளை மதுரை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை வைபவமும் நாளை மறுநாள் அதிகாலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி எழுந்தருகிறார்.
இன்று அழகர் மலையை விட்டு புறப்படும் கள்ளழகருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பளித்து அவரை வணங்கி வரவேற்கின்றனர். தொடர்ந்து காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்புசாமி சன்னதியின் உத்தரவு பெற்று மதுரை நோக்கி கள்ளழகர் தங்க பல்லக்கில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர் கம்பி ஏந்தி புறப்பட்டார்.
விழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கோவில் துணை ஆணையர் கலைவாணன் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான தங்கக் குதிரையில் வண்ண பட்டு உடுத்தி எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும், மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கவும் அழகர் கோவிலில் இருந்து ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், கண்டாங்கி பட்டுடுத்தி கையில் தடியுடன் கள்ளழகர் வேடம் பூண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க தங்க பல்லக்கில் எழுந்தருளி மதுரை நோக்கி புறப்பட்டார்.