கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி. ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் விஷச்சாரய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
அதோடு, கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் குறித்து விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு அதிமுக சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.ல்.ஏக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.