கள்ளக்குறிச்சி விவகாரம் - இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!
அதிமுக தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க அணிந்து வந்தனர்.
மேலும், கேள்வி நேரத்திற்கு முன்பே கள்ளக்குறிச்சி விவாகரம் தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் இன்றும், சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்வதோடு, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சிக்க உள்ளதாகவும், வாய்ப்பு அளிக்காத பட்சத்தில் வெளிநடப்பு செய்வார்கள் என்றும் அதிமுக-வினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தபடி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.