#JharkhandAssemblyElection | இந்தியா கூட்டணியில் முறிவா? ஆர்ஜேடி கூறுவது என்ன?
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறி்த்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் 18-20 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். அதில் உறுதியாக உள்ளோம். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானாலும் 60-62 இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு நாங்கள் எங்களது ஆதரவை வழங்குவோம். இவ்வாறு குமார் ஜா தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆளும் ஹேமந்த் சோரன் கட்சியான ஜேஎம்எம், காங்கிரஸுடன் இணைந்து மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 70 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
எஞ்சியுள்ள 11 தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளான தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் இடது சாரிகளுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், ஆர்ஜேடி கட்சி தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சூசகமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி கட்சி 7 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தி்ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொருத்தவரையில் தொகுதி பங்கீடு ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 தொகுதிகளிலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின்ஐக்கிய ஜனதா தளம் இரண்டு தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.