“ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” - சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திருவாரூர்
மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக
நீதிமன்றத்தில் நடைபெற்று, தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலிதா பெயரில் இருந்த தங்க, வைர நகைகள் மற்றும் அவரது பெயரில் இருந்த 1526 ஏக்கர் நிலம் தமிழக அரசிடம் அண்மையில் கர்நாடக நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.
இத்தகைய நிலங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு ஆராய்ந்து, தமிழகத்தில்
சொந்த குடிமனை இல்லா மக்களுக்கு அந்த நிலங்களை வழங்கவேண்டும். இதுதவிர ஜெயலலிதா பினாமியின் பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் இவ்வழக்கில் இணைக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சொத்துக்கள் அனைத்தும் ஊழல் முறைகேட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள்.
ஆகவே அந்த சொத்துக்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு செய்து, தமிழகத்தில் பல்லாண்டு காலமாக சொந்த குடிமனை இன்றி இலட்சக்கணக்கான மக்கள் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு தலா 3 செண்ட் என்ற அடிப்படையில் 1526 ஏக்கர் நிலத்தினை பிரித்து வழங்க உரிய நல்ல வாய்ப்பு அரசுக்கு கிடைத்துள்ளது.
வரும் மார்ச் 14ம்தேதி கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள். உலகம் முழுவதும்
சமூக மாற்றத்திற்காகவும், உழைப்பாளிகளுக்காகவும் குரல் கொடுத்தவர் காரல்
மார்க்ஸ். அத்தகைய சமூக சிந்தனையாளருக்கு, தமிழக முதல்வர் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, தமிழகத்தில் மிக முக்கியமான இடத்தில் அரசின் சார்பில் சிலை வைக்கும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு உரிய நிதியை வழங்காமல் தமிழக அரசை பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. புயல், மழை நிவாரண நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, தற்போது கல்விக்கான நிதி என பல வகையிலும் தமிழக
அரசை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும். மாநில அரசை பழிவாங்கும் மத்திய அரசின் நடவடிக்கை வண்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிகள் பேசுபவர்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு மாநிலத்திலும் அவர்களது தாய்மொழியை படிக்கிறார்கள். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் இந்தி மட்டும்தான் கற்பிக்கப்படுகிறது. பிற மாநில மொழிகள் அங்கு கற்பிக்கப்படுகிறதா?.
இந்திய நாடாளுமன்றம் தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள்
விரும்புகின்ற வரை இந்தி அந்த மாநிலங்களில் திணிக்கப்படாது என உத்தரவாதம் வழங்கியுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு அடாவடிதனமாக, தமிழக அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடிப்பதின் வெளிபாடுதான் இத்தகைய நடவடிக்கைகள்.
தமிழகம் முழுவதும் மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து
மாவட்டங்களிலும் அனைத்துவகை பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைபாடு. ஆனால் மத்திய அரசு இயற்கை பேரிடர் நிதியில் ஒரு ரூபாய் கூட மாநில அரசுக்கு வழங்காத நிலையில் தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.500 கோடி அறிவித்துள்ளது” என தெரிவித்தார்.