ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - “குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்” என அமித் ஷா உறுதி!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் இன்று(ஏப்ரல்.22) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் சுப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி இச்சம்பவத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பதிவில், “நம்பவே முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். எங்கள் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் வேதனையளிக்கிறது. இந்தத் தாக்குதலை நடத்திய மிருகங்கள் மனிதாபிமானமற்றவர்கள். அவர்கள் அவமதிக்கப்படவேண்டியவர்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, அதனால் அந்த விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. நிலைமை தெளிவாகும்போது அவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் இதுதான் மோசமான பெரிய தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இறந்தவரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது, குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று உறுதியளித்தார்.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்தேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஒரு சந்திப்பை நடத்தினேன். அனைத்து நிறுவனங்களுடனும் அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் ஸ்ரீநகருக்குச் செல்வேன்” என்று கூறியுள்ளார்.