ஜாபர் சாதிக்கிற்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் வழக்கில் சேர்க்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டம்...
தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் வழக்கில் சேர்க்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் முன்பு திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் நேற்று ஆஜராகவில்லை. தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீஸார் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தது. கடந்த 15-ம் தேதி அதிரடியாக அங்கு நுழைந்த போலீஸார் அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
இவர்களுக்கு பின்னால் தமிழகத்தைச் சேர்ந்த சினிமா திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நிரந்தமாக நீக்கப்பட்டார்.
கடத்தல் சம்பவத்தில் தம்மை போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் உட்பட மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் அரசு உடனே கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர்.
மேலும், இயக்குனர் அமீர் நேற்று (பிப்.26) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில், தயாரிப்பாளர் என்பதை தாண்டி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜாபர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால், சட்டத்தின் கரங்கள் அதற்கான வேலைகளை பார்க்கட்டும். இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுபவர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த 23-ம் தேதி மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் வழக்கில் சேர்க்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது. ஜாபரின் செல்போன் டவர் லொகேஷன்ஸ், நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.