For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கன்னியாகுமரியின் நான்கு வழிச்சாலை திட்டத்தை பாஜகவின் சாதனை என பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” - விஜய் வசந்த் எம்.பி!

10:09 PM Mar 16, 2024 IST | Web Editor
“கன்னியாகுமரியின் நான்கு வழிச்சாலை திட்டத்தை பாஜகவின் சாதனை என பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது”   விஜய் வசந்த் எம் பி
Advertisement

கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை மத்திய பாஜக அரசின் சாதனை என பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நான்கு வழி சாலை பணிகள் மீண்டும் தொடங்க காரணமானது எனது முயற்சிகள். கேரள மாநில எல்லையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான நான்கு வழி சாலை திட்டத்தை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு சாத்தியமில்லை கூறி விட்டது. ஆனால் நேற்று குமரி வந்த பிரதமர் மோடி இந்த திட்டத்தை அவர்கள் சாதனையாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற நேரத்தில் நான்கு வழி சாலை பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல், மண் எடுப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த காரணத்தால் இந்த பணிகளை முன்னே எடுத்து செல்ல இயலவில்லை. ஆகவே 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை முடித்து கொண்டது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு.

இந்த திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகள் எதனையும் ஆராயாமல், கன்னியாகுமரி மக்களின் தேவையை புரிந்து கொள்ளாமல் பணி பூர்த்தி ஆவதற்கு முன்னரே இந்த திட்டத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இதே பாஜக அரசு தான். இந்த திட்டத்தை மீண்டும் துவங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மேற்கொண்ட முயற்சிகள் பல.

நமது மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளை சந்தித்து, அவர்களுடன் கலந்தாய்வு செய்து மீண்டும் இந்த திட்டத்தை தொடங்க தேவைகள் என்ன என்று கேட்டறிந்தேன். பின்னர் டெல்லியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை பல முறை சந்தித்து இந்த நான்கு வழி சாலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கைவிடப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க கல், மண் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து கொண்டு வர மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த தேவைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் இந்த திட்டத்திற்கு தேவையான அதிக நிதியான 1041 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் போராடி பெற்று தந்தேன். மறு ஒப்பந்தம் விரைவில் போட வேண்டும் என நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தி ஒப்பந்தம் இறுதி ஆகும் வரை இதற்காக அவராது உழைத்தேன்.

குமரி மக்களுக்காக இந்த போராட்டங்களை நான் மேற்கொண்ட அதே நேரத்தில் இங்குள்ள பாரதிய ஜனதா கட்சியினர் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க விடாமல் முட்டு கட்டை போட முயற்சி செய்தனர். இந்த சவால்களை எல்லாம் எதிர் கொண்டு கன்னியாகுமரி மக்களின் நலனுக்காக போராடி அவர்களுக்கு பெற்று தந்த வெற்றி தான் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க செய்தது. இந்த திட்டத்தை குழி தோண்டி புதைத்த பாரதிய ஜனதா அரசு தற்பொழுது மக்களை ஏமாற்றும் அதுவும் நாட்டின் பிரதமரே மேடையில் பேசுவது அபத்தம்.

இதற்கான பதிலை குமரி மக்கள் தேர்தல் நாளன்று அளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement