மீண்டும் பிரதமராக மோடியை முன்மொழியும் திட்டம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீண்டும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்க உரிமை கோரப்படவுள்ளது. மக்களவையில் தனக்கு உள்ள ஆதரவு எம்பிக்களின் பட்டியலை குடியரசுத்தலைவரிடம் வழங்கி மோடி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். அதன்பிறகு மீண்டும் பிரதமராக மோடி நாளை மறுநாள் (ஜுன் 9) பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மீண்டும் பிரதமராக மோடியை முன்மொழியும் திட்டம் இங்கு அமர்ந்திருக்கும் மக்களின் விருப்பம் மட்டுமல்ல. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு. நாட்டின் குரலாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துகிறார். மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காக அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்களவைத் தலைவராகவும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடியின் பெயரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்துள்ளார். இதை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்” என தெரிவித்தார்.