"பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது" - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !
மதுரை விமான நிலையதில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது, "டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமையுமேயானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. நியாயமான முறையில் டெல்லி தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை எழுப்புகிறது.
இந்தியா கூட்டணி கட்டுகோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாறுவதற்கான திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. திருப்பரங்குன்றத்தில் அமைதி திரும்பி உள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை அரசு கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தற்போது கர்ப்பிணி பெண், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.