அதிமுக ஆலோசனை கூட்டம் | 2026-ல் பாஜக உடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியதாக தகவல்!
2026-ல் வலுவான கூட்டணி அமைக்கப்படும் ஆனால் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, எஸ்பி வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டத்தில் தொகுதியின் வேட்பாளர், மாவட்ட செயலாளர், தொகுதி பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் நிலையே தொடரட்டும். கட்சியில் புதிதாக யாரையும் சேர்த்துவிட வேண்டாம் என சில நிர்வாகிகள் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக கேட்டதாக கூறப்படுகிறது.
இறுதியாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எங்கெங்கே பிரச்சனை இருக்கிறதோ அங்கே சரி செய்யுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதோடு, கட்சியை வலுப்படுத்த வேண்டும், மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும், இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
2026 தேர்தலில் வெற்றியை நோக்கி பணியாற்ற வேண்டும் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எனவும், 2026 இல் பாஜக உடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முக்கியமாக பிரிந்து சென்ற தலைவர்களை இணைப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படவில்லை என கூறப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் இரவு 9 மணி அளவில் முடிந்தது. இதனை அடுத்து அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமாக கட்சியின் பொதுச்செயலாளர் கொடுத்தார் என்று கூறினார்.