"வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக பல்வேறு ஆதாரங்களுடன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது தொடர்பான ராகுல் காந்தியின் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "அண்மைக்காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்துமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
இதன் அடுத்தகட்டம்தான் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா கோப்புகளே (Haryana Files) சான்று! இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.