“அதிஷி தற்காலிக முதலமைச்சரா?”... துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வருத்தம்!
அரவிந்த் கெஜ்ரிவால் உங்களை தற்காலிக முதலமைச்சர் என அழைத்தது எனக்கு வருத்தமளிக்கிறது என டெல்லி முதலமைச்சர் அதிஷிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்னசேனா கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளிவந்துள்ளார். பல நிபந்தனைகளால் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அதிஷி டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.
இதனிடையே வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி. இந்நிலையில் பிரச்சாரம் ஒன்றின்போது செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷியை தற்காலிக முதலமைச்சர் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் அதிஷிக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “அரசியலமைப்புச் சட்டத்தில் தற்காலிக முதலமைச்சர் என்னும் பதவி எதுவும் இல்லை. நீங்கள் எந்த சூழ்நிலையில் நியமிக்கப்பட்டீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனது இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலத்தில், முதல் முறையாக ஒருவர் முதலமைச்சரின் கடமைகளை செய்வதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. உங்கள் முன்னோடியாக இருந்தவர் ஒரு அரசுத் துறையையும் கையாளவில்லை. ஒரு கோப்பில் கையெழுத்திடவில்லை. மாறாக, நீங்கள் பல துறைகளை கையாளுகிறீர்கள் மற்றும் பல நிர்வாக சிக்கல்களை சமாளிக்க முயற்சிக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய வி.கே.சக்சேனா, “டெல்லியின் முதலமைச்சர் ஒரு பெண் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அவர் தனது முன்னோடியை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என தெரிவித்திருந்தார்.