“அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல” - கார்த்தி சிதம்பரம்!
“சீமானும், வருண் குமார் ஐபிஎஸும் பொது வெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல” என மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், CBI விசாரணை தேவை இல்லை. இதில் குற்றவாளி ஞானசேகர் தனிநபராக ஈடுபட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது?. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல கோணத்தில் விசாரணை செய்ய வேண்டும். சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவது நல்லது இல்லை. தலைமைச் செயலர், டிஜிபி இந்த விவகாரத்தில் தலையிட்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக் கூடாது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனியாருக்கு கொடுப்பதில் தவறு இல்லை. தனியார் பள்ளியாக மாறினாலும் அது அரசு பள்ளியாக தான் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் கல்வி கற்று கொடுக்க வேண்டும். கட்டணம் செலுத்தும் பள்ளியாக மாறிவிடக் கூடாது.
ஜோசியர் கூறிய பரிகாரத்தின் காரணமாக அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அண்ணாமலைக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. விலகும் நேரத்தில் ஆறுபடை வீட்டுக்கு செருப்பு இல்லாமல் நடந்து சென்று வந்து, சாட்டை அடி கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும் என ஜோசியர் கூறியிருப்பார். மகளிர் உரிமைத் தொகை 12 மாதங்களும் கொடுப்பதால் பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது பெரிய குறை இல்லை” என தெரிவித்தார்.