“தந்தை இருக்கும்போது வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது ” - பிரதமர் மோடியின் ஓய்வு குறித்த சஞ்சய் ராவத் பேச்சுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் பதில்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு நேற்று(மார்ச்.30) பிரதமர் சென்றிருந்தார். இது ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அவரின் முதல் வருகை. இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சி செய்தபோது ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்றார். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றது குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து விலகி ஓய்வு அறிவிக்கப்போவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்எஸ்எஸ் தான் முடிவு செய்யும், அவர் அங்கு சென்றதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றார் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், மோடி 10, 11 ஆண்டுகளில் எப்போதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார். என்று கூறினார்.
இந்த நிலையில் சஞ்சய் ராவத் பேச்சுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. அது முகலாய கலாச்சாரம். அதைப் பற்றி விவாதிக்க இப்போது நேரம் வரவில்லை. பல ஆண்டுகக்கு அவர் நாட்டை வழிநடத்துவார். 2029 ஆம் ஆண்டில், மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடியை நாம் பார்ப்போம்”
இவ்வாறு முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.