"பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம்" - அண்ணாமலை பேச்சு!
பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது. 6ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (மே 25) நடைபெற்றது. 7-ம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 67 நாடாளுமன்ற மையக் குழுவினரும், 66 மாவட்ட தலைவர்களும், 36 அணிகளின் மாநில அணி பிரிவு தலைவர்களும், 65 மாநில நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
"தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினரை நாம் பெற இருக்கிறோம். டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி 60% வாக்குகள் பெறும். 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது காலத்தின் கட்டாயம். டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் வெல்ல இருக்கிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.