Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” - எடப்பாடி பழனிசாமி!

04:42 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய நிதி அமைச்சர் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன் முன்னெடுப்பாக நேற்று (ஜூலை 22), நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-2024-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில் 6.5 முதல் 7% வரை நிலையான விலை விகிதப்படி (Constant prices) பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2%த்தை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் ஒருசில அம்சங்கள் உள்ளன. எனினும், விவசாயிகள் இன்று உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசு கொள்முதல் உள்ளிட்ட சந்தை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் போன்றவற்றை பெருமளவில் ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது.

அடுத்ததாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களை தொழில் துறையில் தேவைப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தயார்படுத்துதல் போன்றவற்றில் ஒரு சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, பணியாளர் வருங்கால வைப்புநிதி (EPF) அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் (Organized Sectors) முதன் முதலில் வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு ஓராண்டுக்கு ஊக்கத் தொகையையும், அந்த வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோருக்கு ஊக்கத் தொகையையும் வழங்குவது சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

இதுதவிர, திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், கள அளவில் இந்த உதவிகளைப் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே, திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதிலும் உள்ள செயல்முறைரீதியிலான பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகை காண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியின் பெரும் பகுதி தற்போது ஆட்சியிலுள்ள அரசின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு தொழில் வழிப்பாதை, (Industrial Corridor) சாலை கட்டமைப்பு மேம்பாடு, புது விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், புதிய மின் திட்டங்கள், ஆந்திரப்பிரதேசத்திற்கு புதிய தலைநகருக்கான திட்டம், நீர் ஆதார திட்டங்கள் என L160 திட்டங்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கியிருப்பது, மத்திய அரசின் பாரபட்சமான நிலையைக் காட்டுகிறது.

கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த போதிலும், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல், இதே மத்திய அரசு அறிவித்த ஒசூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்வழி திட்டமும் அறிவிப்பு செய்ததோடு கிடப்பில் போடப்பட்டுள்ளதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அதேபோல், நடந்தாய் வாழி காவிரி திட்டம் (காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்) பற்றி ஜனாதிபதி அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பீகார், அசாம், ஹிமாச்சல், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும். எப்போதும் செயல்படுத்துகிற ஊரக வளர்ச்சி திட்டங்கள், நகர்புற மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. பல அறிவிப்புகள் வரி சீர்திருத்தம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் செயல்படுத்தி எந்த அளவுக்கு வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்படும் என்பதையும், அதனால் வரி செலுத்துவோரின் சிரமங்கள் குறைகிறதா என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த தருணத்தில் GST வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வரி விதிப்பைப் பொறுத்தவரை, சுங்க வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு உற்பத்தித் திறனும், போட்டியிடும் திறனும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். எனினும் நேரடி வரி விதிப்பில், புதிய வரி விதிப்பு முறையைப் பின்பற்றுவோருக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது இன்றைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்பது என்னுடைய கருத்து. இதனால் வரி விதிப்பில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் மத்தியில் இது ஒரு பெருத்த ஏமாற்றமே. இதுதவிர, பங்குச் சந்தை வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுவாக, கார்ப்பரேட்டுகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தும் அந்த அதிக லாபத்தை, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அவர்கள் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஊக்குவிப்பதற்கான எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை

எனவே, தனியார் துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.  மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த வரவு, செலவு அறிவிக்கப்படவில்லை. அறிக்கையில் முதியவர்களுக்கான எந்த சலுகைகளும் முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த சலுகைகளையாவது திரும்ப அளித்திருக்கலாம்.

எனவே, இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது. தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
மத்திய பட்ஜெட் 2024AIADMKBJPBudget 2024Budget Daybudget sessionBudget Session 2024BUDGET WITH NEWS7TAMILedappadi palaniswamyEPSmodi govtNews7Tamilnews7TamilUpdatesNirmala sitharamanPM Modiunion budget
Advertisement
Next Article