For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

01:47 PM Sep 04, 2024 IST | Web Editor
காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்   eps பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

அதிமுக ஆட்சியில் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக தண்ணீர் எடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக 2023-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை மீட்டர் பொருத்தி, கண்காணித்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, தமிழ்நாடு அரசு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

Tags :
Advertisement