தமாகாவிலிருந்து விலகுகிறாரா யுவராஜா? - எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு!
தமாகா இளைஞர் அணி தலைவரான யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதே போல பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அவர் தெரிவித்ததாவது..
”மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும். பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிக்க தமாகா முடிவு செய்துள்ளது.” இவ்வாறு ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்தார்.
இந்த நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணியின் தலைவராக உள்ள யுவராஜா அதிமுக பொதுச்செயலாளாரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்” என யுவராஜா தெரிவித்தார்.