This News Fact Checked by ‘Boom’
அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆட்சியில் உள்ள பிரச்னைகளை தானே ஒப்புக்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
டெல்லி சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த 15 வினாடி வீடியோவில், கெஜ்ரிவால், “ஒவ்வொரு காலனியிலும் தண்ணீர் பிரச்னை இருக்கிறது என்பதை நான் இப்போதுதான் அறிந்தேன், இல்லையா? ஒவ்வொரு காலனியிலும் சாக்கடை பிரச்னை இருக்கிறது, இல்லையா? சாலைகள் உடைந்து கிடக்கின்றன, இல்லையா? சுற்றிலும் அழுக்காக இருக்கிறது, இல்லையா?” என கூறுகிறார்.
பயனர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசாங்கத்தின் தோல்விகளை ஒத்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் பிப். 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்பி ராம்வீர் சிங் பிதுரி, கெஜ்ரிவால் அரசைக் குறிவைத்து இந்த முழுமையற்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
பதிவின் Archive இணைப்பு.
அதே நேரத்தில், வலதுசாரி பயனர் ஜிதேந்திர பிரதாப் சிங்கும் தனது ட்விட்டர் (எக்ஸ்)-ல் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ஆம் ஆத்மி தலைவர் அதிஷியை குறிவைத்தார்.
பதிவிற்கான Archive இணைப்பு.
உண்மை சரிபார்ப்பு:
இதுதொடர்பான முக்கிய வார்த்தைகளை தேடியதில், ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் அசல் வீடியோ கிடைத்தது. அதன் விளக்கத்தில் விஸ்வாஸ் நகரில் பொதுக்கூட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
25 நிமிடங்கள் 10 வினாடிகள் கொண்ட இந்த 29 நிமிட வீடியோவில், கெஜ்ரிவால், “நான் உங்கள் அனைவரையும் கூப்பிய கைகளுடன் கேட்டுக்கொள்கிறேன். சென்ற முறை தவறு செய்து விட்டீர்கள். டெல்லியில் 70ல் 62 இடங்கள் கிடைத்தன. நீங்கள் எட்டு இடங்களில் தவறு செய்துவிட்டீர்கள். விஸ்வாஸ் நகரிலும் தவறு செய்துவிட்டீர்கள். விஸ்வாஸ் நகரில் அவரது கட்சியினரை (பாஜக) எம்எல்ஏ ஆக்கியுள்ளீர்கள். அதை நான் பாராட்டுகிறேன். பத்து ஆண்டுகளாக, அவர் (பாஜக எம்எல்ஏ) எங்களுடன் நிறைய சண்டையிட்டார். அவர் ஒரு வேலையும் செய்யவில்லை.
நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஒவ்வொரு காலனியிலும் தண்ணீர் பிரச்னை இருக்கிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்... இல்லையா? ஒவ்வொரு காலனியிலும் சாக்கடை பிரச்னை இருக்கிறது... இல்லையா? சாலைகள் உடைந்துள்ளன... இல்லையா? சுற்றிலும் அசுத்தமாக இருக்கிறது... இல்லையா?" என தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, கெஜ்ரிவால், “நான் அவரிடம் (பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ஷர்மா) சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும், மொஹல்லா கிளினிக் கட்ட வேண்டும் என்று நிறைய கூறினேன். தண்ணீர் கொடுக்க தயாராக இருந்தோம். அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே நீங்கள் யோசித்துப் பாருங்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு சண்டை, சச்சரவுகள் வேண்டுமானால், அவருக்கு வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.
மேலும், மேடையில் நின்றிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை சுட்டிக்காட்டிய கெஜ்ரிவால், "நீங்கள் உங்கள் வேலையை செய்ய விரும்பினால், அவருக்கு வாக்களியுங்கள்" என கூறினார்.
ஜனவரி 20ம் தேதி, டெல்லியின் விஸ்வாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் தீபக் சிங்லாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக கெஜ்ரிவால் வந்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவை சேர்ந்த ஓம் பிரகாஷ் சர்மா அங்கு எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பதும், இம்முறையும் பாஜக சார்பில் விஸ்வாஸ் நகர் வேட்பாளராக களமிறங்குவதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில், பொதுக்கூட்டத்தில், ஓம் பிரகாஷ் சர்மாவை விமர்சித்து, தனது பகுதியின் அனைத்து பிரச்னைகளையும் பட்டியலிட்ட கெஜ்ரிவால், இந்த 10 ஆண்டுகளில் விஸ்வாஸ் நகரில் எந்த வேலையும் செய்யவில்லை என்று கூறிக்கொண்டிருந்தார்.
இந்த பொதுக்கூட்டத்தின் வீடியோவை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். அதில் வைரல் வீடியோவின் ஒரு பகுதி உள்ளது.
விஸ்வாஸ் நகரில் நடந்த இந்த பொதுக்கூட்டம் தொடர்பான செய்திகளையும் பல செய்திகள் வெளியிட்டன. கெஜ்ரிவாலின் இந்த அறிக்கை ஏபிபி செய்தியின் அறிக்கையிலும் உள்ளது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.