For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” - கனிமொழி எம்.பி. கேள்வி!

02:50 PM Aug 06, 2024 IST | Web Editor
“மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா ”   கனிமொழி எம் பி  கேள்வி
Advertisement

நாட்டின் பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை பங்களிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா? என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

Advertisement

மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்கவும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை தடுக்கவும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக  தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக மீனவர்களின் விவகாரம் குறித்து மக்களவையில் பேசினார். அவர் பேசியதாவது, “மீனவர்களின் நிலை குறித்தும், பிரச்னை குறித்தும் விளக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கண்மூடி இதை பார்த்து கொண்டிருக்கிறார்களா? தங்களது நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும்போது, செயல்படாமல் அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

1977-ம் ஆண்டு முதல் இந்தியா இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி கட்சத்தீவில் தங்களது வலைகளை காயவைக்கும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு. ஆனால் இரண்டு அரசாங்கத்தை சேர்ந்த அதிகாரிகளும் இது போன்ற ஒரு ஒப்பந்தம் இருப்பதையே மறைத்து விட்டார்கள். இதனால் தான் இந்திய மீனவர்கள் தவிக்கிறார்கள். இலங்கை படை இந்திய மீனவர்களை கொல்லும் அளவிற்கு துணிகிறார்கள்.

ஒரு குழு அமைத்து, இலங்கைக்கு சென்று சிறையில் வாடும் மீனவர்களை சந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை அவர்கள் பங்களிக்கிறார்கள். 27 இந்திய மீனவர்களின் படகுகளை சமீபத்தில் இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளது. அவர்கள் வசம் ஏற்கனவே உள்ள 177 இந்திய மீனவர்களின் படகுகள் அந்த நாட்டின் உடமையாக்கி உள்ளார்கள். இந்திய மீனவர்களிடம் இருந்து பிடித்து செல்லும் படகுகளை ஒருபோதும் இலங்கை திருப்பி தருவதே இல்லை.

தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியான தீர்வு எடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இப்படி துயரங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க முடியாது” என தெரிவித்தார்.

Tags :
Advertisement