For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

10:06 AM Sep 10, 2024 IST | Web Editor
ரூ 2666 கோடி முதலீடு   5365 பேருக்கு வேலைவாய்ப்பு    முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்
Advertisement

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சிராப்பள்ளியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டின் மகத்தான வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, அதன்மூலம் தொழில் வளர்ச்சியை சிறப்புற உயர்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் சிறப்பான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்ற குறிக்கோளோடு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது.

இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் இலக்கினை விரைவில் அடைவதற்காகவும் தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4350 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 9.9.2024 அன்று சிகாகோவில், ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள்:

ஜாபில் நிறுவனம் (Jabil Inc.)

ஜாபில் நிறுவனமானது, ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குபவர்களில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. ஜாபில் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஜாபில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

முதலமைச்சர் முன்னிலையில் ஜாபில் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சிராப்பள்ளியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் ஜாபில் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மேட் கிரவுலி, முதுநிலை இயக்குநர் நித்து சின்கா மற்றும் பி.ஜெ. ஃபேரன்காப் ஆகியோர் பங்கேற்றனர்.

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் (Rockwell Automation)

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனமானது, தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான (Industrial Automation and Digital transformation) உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின்னிலுள்ள மில்வாக்கியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

முதலமைச்சர் முன்னிலையில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பிளேக் மோரெட், முதுநிலை துணைத் தலைவர் ராபர்ட் பட்டர்மோர், துணைத் தலைவர் எட்வர்ட் மோர்லாண்டு, இயக்குநர் முத்துகுமரன் பிச்சை ஆகியோர் பங்கேற்றனர்.

ஆட்டோடெஸ்க் நிறுவனம் (Autodesk)

ஆட்டோடெஸ்க் நிறுவனமானது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. ஆட்டோடெஸ்க் நிறுவனத்தில் உலகளவில் 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

முதலமைச்சர் முன்னிலையில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஜெப் கிண்டர், துணைத் தலைவர் கென் ஃபூ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்”

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement