For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் முதல் ‘புல்லட் ரயில்’ நிலையம் - வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

08:21 PM Dec 08, 2023 IST | Web Editor
இந்தியாவின் முதல் ‘புல்லட் ரயில்’ நிலையம்   வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்
Advertisement

குஜராத்தில் அமையவுள்ள முதல் புல்லட் ரயில் நிலையத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Advertisement

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன கட்டுமான கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையமானது இந்தியாவின் கலாசார பாரம்பரியமாக திகழும் வகையில் அமைந்துள்ளது. மேலும், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தனித்துவமான அலங்கார பொருட்களானது, இந்திய கட்டுமானத்தின் பழமையும், புதுமையையும் இணைத்து பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. சபர்மதி புல்லட் ரயில் நிலையத்தில் உள்ள வசதிகள், பயணிகளுக்கு உகந்த, செளகரியத்தை உணரச் செய்யும் வகையில் உள்ளன.

மும்பை - அஹமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு இருவழி புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது இந்த தொலைவை 2.07 மணி நேரத்தில் கடக்க முடியும். புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி. இதில், 81 சதவீதத்தை 0.1 சதவீத வட்டியில் 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் புல்லட் ரயில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர். வரும் 2026-ம் ஆண்டில் முதல்கட்ட பணிகள் நிறைவடையும் என்றும், 2028-ல் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய புல்லட் ரயில் நிலையத்தின் வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Tags :
Advertisement