ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி! முதல்வராகிறார் உமர் அப்துல்லா!
ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக, - ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை பிரிக்கப்பட்டன. இவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் முடிந்து, இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளைப் பிடித்துள்ளது. இதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது.
அடுத்து பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தனித்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வென்றிருக்கிறது. அடுத்து ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.