"2-வது சுதந்திர போரட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது" - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு
இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்றுவரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோர் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
"பிரதமர் மோடி அவரின் ஆட்சிக்காலத்தில் என்னென்ன அறிவித்தார்? என்னென்ன செய்தார்? 2013 ஆம் ஆண்டு கடல் தாமரை என்ற மாநாட்டை நடத்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியாக ஒரு அமைச்சகம் அமைப்போம். மீனவர்கள் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையை எல்லையில் நிறுத்துவோம் என்று உத்திரவாதம் கொடுத்தார்கள். ஆனால் நிலைமை என்ன? மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படாது மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.
நம் மீனவர்களை தாக்குவதையும், வலைகளை கிழிப்பதையும், பெட்ரோல் குண்டுகளால் தாக்குவதையும் பிரதமர் மோடி அரசு பாதுகாக்கிறதா? வாக்குறுதிகள் நிறைவேற்றியதா? எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். பட்டியலின மக்களை ஏமாற்றுகிறார்கள். மீனவர்களை நசுக்குவதில் முதன்மை கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு உயிர் கூட போகாது என்று சொன்னார்கள். Fலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர். இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் பிரதமர் மோடி ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறோம். நீங்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறீர்கள்.
மீனவர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாதுகாப்பார் என உறுதியாக
நம்புகிறோம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் சேர்த்து வைத்த செல்வங்களை பாஜக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
பால் விலை, பெட்ரோல், எல்பிஜி எரிவாயு விலையை பாதியாக குறைப்பேன் என்றார், என்ன நடந்தது? இந்திய பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு இணையாக உயர்த்துகிறேன் என்று சொன்னார்களே செய்தார்களா?
ஒவ்வொரு ஆட்சிக்கும் ஒவ்வொரு மாடல் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. பாஜக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது. மே மாதத்திற்கு பிறகு அவர்கள் வேலை இங்கு நடக்காது."
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார்.