“இடஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் எனவும், அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் என மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று (24.04.2024) நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
இம்மாநாட்டில் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் உரையை அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் வாசித்தார்.
பி. வில்சன் வாசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை விவரம் பின்வருமாறு:
இன்று நாம் கூடியுள்ள வேளையில், இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது எனக் கருதுகிறேன். சமூகநீதிக்கான ஒளிவிளக்காகத் தமிழ்நாடு திகழும் மரபு 1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.
விடுதலைக்கு பிறகு, இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம், 'happenings in Madras' என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதை இந்தச் சட்டத்திருத்தம் உறுதிசெய்தது.
தற்போது, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% ஆக உள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50%-ஐத் தாண்டக்கூடாது எனத் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவைவிடவும் கூடுதலாகத் தமிழ்நாட்டில் இது நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக, தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதிச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம்.
மேலும், கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. தி.மு.கழகத்தின் சமூகநீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படைகிறேன். அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
Empowering the marginalised has been Tamil Nadu's legacy since the times of Justice Party.
Delighted to have my message on #SocialJustice shared by our MP @PWilsonDMK at the Samruddha Bharat Foundation's conference.
Let's continue our journey towards a more inclusive #INDIA! pic.twitter.com/vyABUDdwPM
— M.K.Stalin (@mkstalin) April 24, 2024
இந்நிலையில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் தனது உரை வாசிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X (ட்விட்டர்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா கூட்டணியின் சமூகநீதிக்கான இந்த பயணத்தை தொடர்வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.