இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ள நிலையில், மம்தா, உத்தவ், அகிலேஷ் போன்ற தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக, கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 7 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும்" என பதிவிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த டொனால்ட் டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர்கள் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும், பாராளுமன்றத்தில் ஓரணியில் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. பஹல்காம் தாக்குதல், காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், ஆமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பிரச்சினைகளையும் விவாதிக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே, தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.