#Jammu&Kashmir -ல் இந்தியா கூட்டணி வெற்றி | திருச்சியில் பொதுமக்களுக்கு காஷ்மீர் ஆப்பிள்கள் வழங்கி கொண்டாட்டம்!
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றிப் பெரும் சூழல், நிலவி வருவதால் திருச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு காஷ்மீர் ஆப்பிள்களை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்கு கள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்படி, இந்தியா கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றது. காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி 50 தொகுதிகளிலும், பாஜக 34 தொகுதிகளிலும், பிடிபி 4 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெருவதற்கான சூழல், தற்போது நிலவி வருவதால் திருச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் காஷ்மீர் ஆப்பிள்களை மக்களுக்கு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.