வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் நாளை போராட்டம்...
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
வருமான வரித்துறையால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி மனுத்தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை தீர்பாயம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் நேரத்தில் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ரூ.1823 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 4 நிதி ஆண்டுகளில் ரூ.1823 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"Yesterday, the Indian National Congress received fresh notices from the IT department to pay Rs 1823.08 crores.
In light of this egregious attack on democracy and the imposition of tax terrorism on our party amidst the crucial Lok Sabha Elections, all PCCs are requested to… pic.twitter.com/HXHQhJChAm
— Congress (@INCIndia) March 29, 2024
இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ்க்கு எதிராக நாடு முழுவதும் நாளை (மார்ச் 30) போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடி வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை பிடித்தம் செய்ததற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைமையும், அந்தந்த மாநில, மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.