மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!
இந்திய அளவில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் உள்ள இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி உள்ளிட்ட 4 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது. முன்னதாக மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியாகாந்தி முதன்முறை இந்த முறை மாநிலங்களவையில் இருந்து போட்டியிடுகிறார்.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் நாளை கடைசி நாளாக இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.