ஈசிஆரில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்... முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தெர்டர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும், பெண்கள் பயணித்த காரை இளைஞர்கள் சுற்றுவளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதற்கிடையே, பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் இளைஞர்களை தேடி வந்தனர்.
பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் 7 சம்பந்தப்பட்டுள்ளதாகவும், மற்ற மூவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் கார்த்திகேயன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் பிப்.14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்துருவை போலீசார் நேற்று கைது செய்தனர். சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவு சந்துருவை போலீசார் ஆஜர் படுத்தினர். சந்துருவுக்கு பிப்.14வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கைதான சந்துரு மீது ஏற்கனவே கடத்தல், பண மோசடி ஆகிய வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.