For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என தகவல்..

08:05 AM Dec 01, 2023 IST | Web Editor
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம்   காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என தகவல்
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசின் ஏற்பாட்டில் நாளை (டிச. 2) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் 19 நாள்களில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றான 3 மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்படவுள்ளன.

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடைபெறும் வகையில், பல்வேறு கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர்களின் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாளை (டிச. 2) நடத்தவுள்ளார். இதில் ஆளும் பாஜக தரப்பில் ராஜ்நாத் சிங், மத்திய வா்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இதில் 12 மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கொண்டுவரப்படவுள்ளன. இது தவிர 7 மசோதாக்கள் அறிமுகம், பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப் பிரிவுகளை புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கும் 2 மசோதாக்கள், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த மசோதாக்கள் தவிர, 2023-24-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட மானிய கோரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க பரிந்துரைக்கும் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை, குளிர்காலத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், மறுநாள் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

Tags :
Advertisement