“அடுத்த 10 ஆண்டுகளில் 50% முதலமைச்சர்கள் பெண்களாக இருப்பார்கள்” - ராகுல் காந்தி பேச்சு!
அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் பதவியில் இருப்பவர்களில் 50% பேர் பெண்களாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கொச்சியில் அந்த மாநில மகளிர் காங்கிரஸ் மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“இப்போது நமது கட்சி சார்பில் பெண்கள் யாரும் முதலமைச்சராக இல்லை. ஆனால், முதலமைச்சராகும் தகுதியுடைய பெண்கள் பலர் நமது கட்சியில் உள்ளனர். கட்சியில் பெண்களுக்கு உரிய இடம் கொடுப்பது தொடர்பாக ஏற்கெனவே விவாதித்துள்ளோம். அதன்படி காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருப்பவர்களில் 50% பேர் பெண்களாக இருப்பது சரியாக இருக்கும் என்பது எனது கருத்தாக உள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் இந்த இலக்கை நாம் எட்டுவோம்.
ஆண்களைவிட பெண்கள் பல விஷயங்களில் உயர்ந்தவர்கள் என்றே கருதுகிறேன். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முழுமையாக ஆண்கள் ஆதிக்கமுள்ள அமைப்பாக உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றில் பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதே இல்லை. பெண்களும் இந்திய அரசியலில் பங்களிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை. இது ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகளிடம் கிடையாது. இதுவும் காங்கிரஸ்-ஆர்எஸ்எஸ் இடையிலான அடிப்படை வேறுபாடுகளில் ஒன்று.பெண்கள் முறையாக உடை அணியாத காரணத்தால்தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்பது பல வலதுசாரி தலைவர்களின் கருத்தாக உள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களையும் அவமதிக்கும் விஷயமாகும். பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் செயல்தான் இது. இதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் காங்கிரஸுக்கும் உள்ள வேறுபாடு.
டெல்லியில் நாட்டின் தலைமைப் பதவியில் உள்ள தலைவர்கள் எப்போதும் கேமராக்களையும், ஒலி பெருக்கிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் மக்கள் குரலைக் கேட்பது இல்லை. தாங்களே பேசி தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் மக்கள் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களின் குரல் கேட்கப்படுகிறது.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.