சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடி மதிப்பில் "தோழி விடுதிகள்"!
சென்னை, கோவை, மதுரையில் "தோழி விடுதிகள்" கட்டப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
- தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் தாம்பரம், திருச்சி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் 1,145 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35 கோடி செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
- சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய நகரங்களில் 432 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
- இதைத்தொடர்ந்து வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்”